ஞாயிறு, 16 அக்டோபர், 2011

சீன ஞானி கன்புசியஸ்

சீன ஞானி கன்புசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன தத்துவஞானி இவர். இவரது தத்துவச் சிந்தனைகளை புரிந்துகொள்வது அத்தனை எளிதாக காரியம்அல்ல. பலாப்பழத்தின் முரட்டுத்தோலை உறிந்து சடைகளில் இருந்து பழங்களை பிரித்து கொட்டையை விலக்கி சுளைகளை சாப்பிடுவதைப்போன்ற கடினமான முயற்சி தேவை. அத்தனை உழைத்தால் தான் இவரதுஅரிய சிந்தனைகளை ஓரளவிற்காவது புரிந்து கொள்ள முடியும்.

எனவே அவரது கருத்துக்களை தத்துவச் சிந்தனைகளை அப்படியே எழுதாமல் அவைகளுக்கு விளக்கம் அளித்து எளிமைப்படுத்தி இருக்கிறேன். எல்லோருக்கும் புரியும் வகையில் சிறிய கதைகள், பல்வேறுவகையான தகவல்கள், பழம்பாடல்கள், நமது நாட்டில் நடந்த நிகழ்ச்சிகள், வரலாற்றுச் செய்தகள் என்று எனக்குத் தெரிந்தவற்றை அவரது சிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விளக்கி இருக்கிறேன்.

இந்த புத்தகத்தைப்படித்த அத்தனை பேரும் மிகவும் பாரட்டினார்கள். பல இடங்களில் இருந்தும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பாராட்டியவர் பலர். இந்த நூல் பல இனிய நண்பர்களைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

தேர்வு பயத்தை விரட்டுங்கள்

மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள்

மாணவச் செல்வங்களே

எனக்குத் தெரிந்த ஆலோசனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இதன் மூலமாக நீங்கள் மிக நன்றாகப் படிக்கின்ற வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு பயங்களை விரட்டி அடிக்கலாம், வெற்றி பெறலாம்.

நான் சிறுவனாக பள்ளியில் படித்தபோதும் , பிறகு கல்லூரியில் படித்த காலங்களிலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறேன். இவை மிக நல்ல முறையில் நான் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டி இருக்கின்றன.

மேலும் இந்த வழிமுறைகள் எனக்கு இலக்கியம், தத்துவம், போன்ற வாழ்க்கைப் பாடங்களை கற்கவும் பெரிதும் உதவின. அறிவியல் தொடர்பான கல்வியைக் கற்பதற்கும் நான்சில வழிகளை உபயோகித்தேன். அவைகளை இந்த நூலில் தேவைப்படும் இடங்களில் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

மாணவர்களுக்கு தேர்வு பயத்தை விரட்டி, வெற்றிக்குச் செல்லும் வழியில் அழைத்துச் செல்ல இந்த நூல் உதவும். விஜயாபதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது.

அதிசயநாய் ரோஜர்

அதிசயநாய் ரோஜர்

அதிசயநாய் ரோஜர் செய்த துப்பறியும் சாகசங்களை இந்தக் கதை தொகுப்பில் நீங்கள் படிக்கலாம். ரோஜர் என்பது சாதாரண நாய் அல்ல. அது சிறுத்தையைப்போல ஓடக்கூடியது, சிங்கத்தைப்போல வலிமையானது, ஒரு சி ஐ டியைப்போல யோசிக்கும் அறிவுத்திறன் கொண்டது. மேலும் நகைச்சுவை உணர்வு நிரம்பியது.

ரோஜரின் சாகசங்களைச் சொல்லும் இந்தக் கதைகள் அழகர்சோலை என்ற சிறுவர்மாத இதழில் துப்பறியும் ரோஜர் என்ற பெயரில் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து வெளிவந்து சிறுவர்களை பரவசப்படுத்தியது.

இந்தக் கதைகளை படித்த சிறுவரும் சிறுமியரும், ஏராளமான எண்ணிக்கையில் கடிதம் மூலமாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அவற்றில் சிறந்த கருத்தை தெரிவித்தவர்களுக்கு ஒரு திருக்குறள் நூல் பரிசாக அளிக்கப்பட்டது.

இந்தக் கதைகளைப் படித்து விட்டு பல குழந்தைகள் ரோஜர் நாய் எங்கே இருக்கு ? அதைப் பார்க்க முடியுமா? அது என்ன சாப்பிடும் ? என்றெல்லாம் என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆர்வத்தோடு கேட்டனர். இந்தக் கதைகளைக் கேட்ட எனது மகன் குமாரவிஜயன், அப்போது அவன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் . தெருவில் நின்ற ஆட்டோரிக்ஷாவைக்காட்டி அப்பா , இந்த ஆட்டோவை ரோஜர் தாண்டிக்குதிக்கும் இல்லே என்பான். அந்த அளவிற்கு சிறுவர்களின் மனதில் ரோஜர் என்ற அதிசய நாயின் சாகங்கள் கொள்ளை கொண்டு விட்டன.

வியாழன், 8 செப்டம்பர், 2011

சுழலும் பூமி

சுழலும் பூமியும் சுற்றுப்புற பாதுகாப்பும்

இந்தப் பூமியில் வாழுவதற்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை மற்ற உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கூட இருக்கிறது.

தெய்வத்திற்கும் விலங்குகளுக்கும் இடையில் நீண்டு கிடக்கும் ஒரு கயிறுதான் மனிதன் என்கிறார் ஜெர்மன் தத்துவ அறிஞர் நியட்ஷே. இயற்கையை சீர்குலைத்து அபாயத்தை ஏற்படுத்துகிறவர்கள் மனிதர்கள் தான்.

ஒரு பூவுக்கு ஏற்படும் நெருக்கடி நட்சத்திரங்களையே அசைத்துப் பார்க்கும் என்பதே இயற்கை விதி. பாண்டா கரடியும், நீலத்திமிங்கிலமும் உருவத்தில் பெரியவை ஆனால் இவைகள் நமது அலட்சியத்தினால் அழிந்து வருகின்றன.

சூழல் விழிப்புணர்வு குறித்து நான் வானொலியில் சொன்ன கருத்துக்களை விரிவாக்கம் செய்து இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறேன். வாசகர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நூலின் நோக்கம் பூங்கொடி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது.

நண்பர்களே வருக

நண்பர்களே வருக
இந்த வலைப்பதிவில் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.உங்கள் கருத்துக்களை எனக்கு அனுப்பி வையுங்கள்.